Single Blog Title

This is a single blog caption

சிவாஜி ஏன் மிகை நடிப்பைத் தேர்ந்தெடுத்தார்?

//
Posted By
/
Comment0
/
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பு பாணி ‘மிகை நடிப்பு’ என்ற விமர்சனம் எப்போதும் உண்டு; அவர் எதிர்கொண்ட பெரும் விமர்சனம் என்றும் அதைச் சொல்லலாம். சரி, சிவாஜியின் மிகை நடிப்பை நாம் எவ்வாறு அர்த்தப்படுத்திக்கொள்ளப்போகிறோம்?

சிவாஜி பலவிதமான நடிப்பு முறைகளை அறிந்தவர். மேற்கத்திய யதார்த்த பாணி நடிப்பு வரப்பெறாதவர் அல்ல. ஆனாலும், மிகை நடிப்பு பாணி என்பது அவரது அடையாளமானது. சொல்லப்போனால், அவரது நடிப்பை விமர்சித்தவர்கள்கூட அவரது படங்களைப் பார்த்து தாரைதாரையாகக் கண்ணீர் வடித்திருக்கக்கூடும் – பெண்கள் மட்டுமல்ல; ஆண்களும்கூட.

இன்றும் சிவாஜி படங்களைப் பார்ப்பதற்கு எனக்குப் பெரும் தடையாக இருப்பது நான் கண்டிப்பாக அழுதுவிடுவேன் என்கிற அச்சம்தான். இந்த அழுகை என்னைப் பல காலங்கள் பின்னுக்கு இழுத்துவிடும் என்று அஞ்சுகிறேன். குறிப்பாக, அவரது ‘பா’ வரிசைப் படங்களைச் சொல்லாம். இந்தப் படங்களில், அவர் ஏற்கும் பாத்திரங்கள் பெரும் துயரத்தை, வலியை அனுபவிக்கின்றன. சுமை, பழி, பொறுப்பு, கடன் எல்லாம் அவர் ஏற்கும் பாத்திரத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும். அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு அந்தப் பாத்திரங்கள் தம்மை நிலைநிறுத்திக்கொள்கின்றன; மீண்டுவருகின்றன.

போலச்செய்தல்தானே நடிப்புக்கான வரையறை?

நடிப்பு என்பது அடிப்படையில் பிரக்ஞைபூர்வமாக போலச்செய்தல். தான் ஏற்கும் பாத்திரத்தை ஒரு நடிகர் போலச்செய்கிறார். சிவாஜி இத்தகைய பாத்திரங்களை ஏற்கும்போது, எதைப் போலச்செய்கிறார் என்பதுதான் கேள்வி. சிவாஜியின் பாத்திரங்களின் உளவியல்ரீதியான வெளிப்பாட்டை போலச்செய்ய முயற்சிக்கிறார் என்ற புரிதலிலிருந்துதான் அவரது நடிப்பை மிகை நடிப்பு என்கிறோம்.

ஆனால், சிவாஜி பாத்திரங்களின் உளவியலைப் போலச்செய்யவில்லை. மாறாக, சுற்றத்தாரை, குடும்பத்தை, உறவை, சமூகத்தை, தேசத்தை முன்னிலைப்படுத்தி அதற்காக எத்தகைய வேதனையையும், வலியையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையைப் போலச்செய்கிறார். இது உளவியல் பூர்வமானதல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எதிர்மறையாகவே அணுக வேண்டியதா துயரம்?

வலி, வேதனை, துயரம் போன்றவை பொதுவாக எதிர்மறையாகப் பார்க்கப்படுகின்றன. உடலில் உள்ள நோயை வெளியேற்றுவதுபோல் உடல், உள்ளத்திலிருந்து வலி, வேதனைகளையும் வெளியேற்றுவதே நேர்மறையானதாக நம் மனதில் இருக்கிறது. ஆனால், வலி என்றால் என்ன? வலி எதிர்மறையானது மட்டும்தானா? வலி தனிமனித அனுபவத்துக்குள் சுருங்கிவிடக் கூடியதுதானா? வலிக்கு முகமை என்று ஒன்று இல்லையா? இத்தகைய கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது.

நாம் வலியை, துயரத்தைப் பார்க்க முடியாது, தீண்ட முடியாது, ருசிக்க முடியாது. அதற்குப் பருமனான பண்புகள் ஏதும் கிடையாது. ஆனாலும் துயரத்தை, வலியை அனுபவிக்கிறோம். வலி, வேதனை எப்போது அனுபவமாகிறது? “ஒரு துயரர் அவரது வலியை மொழியாக்கம்செய்து, துயரத்தை ஒரு சமூக உறவாக மாற்றும்போது அது அனுபவமாகிறது” என்கிறார் மானுடவியலாளர் தலால் அசாத்.

மிகை தவிர்க்க முடியாமல் போகும் இடம்

ஒரு துயரர் அவர் அனுபவிக்கும் துயரத்தின் ஊடாக சமூகத்துடன் உறவை உருவாக்கிக்கொள்கிறார்; அர்த்தப்படுத்துகிறார். வலி, வேதனை போன்றவை தனிமனித இயலாமை சார்ந்தவை அல்ல. உதாரணமாக, கீழே விழுந்துவிட்ட அவரது குழந்தையைக் கண்டு ஒரு தாய் பதறி ஓடிவருகிறார். ஒரு தாயாக இருப்பதால் மட்டுமே அவர் ஓடிவரவில்லை. ஓடிவருவதன் மூலமாகத் தாய் என்ற உறவையும் அவர் பலப்படுத்துகிறார்; உத்தரவாதப்படுத்துகிறார்.

இத்தகைய வெளிப்பாடுகளில் மிகை தன்மை தவிர்க்க முடியாததாகிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் மக்களின் வலியை, வேதனையை அர்த்தப்படுத்திய பெரும் கலைஞன் சிவாஜி. ஸ்டானிஸ்லாவிஸ்கியின் ‘மெதட் ஆக்டிங்’ முறையை சிவாஜி முழுமையாக அறிந்திருந்தாலும், எலிசபெத் நடிப்பு பாணியை அவரது தனித்த பண்பாக வரித்துக்கொண்டார்.

எலிசபெத் நடிப்பு பாணியில் ஒரு நடிகர் தன்னை முழுமையாக இழக்க வேண்டியிருக்கிறது. நடிப்பு என்பது போலச்செய்தல் என்பதைத் தற்காலிகமாகவேனும் மறக்க வேண்டியுள்ளது. இதில் தனிமனிதனின் நுட்பமான உளவியலைக் காட்டிலும் கூடுதலாக ஏதோ ஒன்றை அது கொண்டிருக்க வேண்டியுள்ளது. இந்த இடத்தில்தான் அர்ப்பணிப்பைப் போலச்செய்தார் சிவாஜி.

தான் ஏற்கும் பாத்திரத்துக்கும் தனக்கும் இடையேயான இறுக்கத்தைக் காட்டிலும், அவர் ஏற்ற பாத்திரத்துக்கும் மக்களுக்கும் இடையேயான இறுக்கத்தைப் பிரதானப்படுத்தினார் சிவாஜி. அவர் தமிழ் மக்களிடம் பெற்ற பெரும் அங்கீகாரம் அவர்கள் உள்ளார்ந்து அனுபவித்த, அவர்களுக்குள் தக்கவைத்துக்கொள்ள முடியாத வலியை எல்லாம் திரையில் சிவாஜி என்ற பெரும் கலைஞன் ஊடாக சாதகமாக ஒன்றாக மாற்றி மகிழ்ந்தார்கள் என்பதுதான்.

வலியைச் சமூக உறவாக்கியவர்

வலியும் வேதனையும் அந்தரங்கமானவை அல்ல; அவை எப்போதும் சமூக உறவுக்கானது என்று விட்டிங்கென்ஸ்டைன் சொன்னதையே சிவாஜி அவரது நடிப்பு பாணியாக மாற்றினார். அவரது நடிப்பு தேசத்தின் மீதும், சமூகத்தின் மீதும், அரசாங்கத்தின் மீதும், குடும்பங்கள் மீதும், தனிமனித உறவுகள் மீதும், மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் அதற்காக எத்தகைய வலிகளையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் வெகுஜன உளவியல் இருந்த ஒரு காலகட்டத்தின் வெளிப்பாடு. இது அவருக்கு முன்னும் சாத்தியமில்லை; பின்னும் சாத்தியமில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், சிவாஜியின் நடிப்பு மிகை பாணியிலானது அல்ல. அது ஒரு காலகட்டத்தின் தேவை. அதை மிகச் சிறப்பாக நிறைவேற்றியதன் மூலமே சிவாஜி பெரும் கலைஞனாகத் நிகழ்கிறார்!

Leave a Reply